ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று கன்னியாகுமரி வருகிறார் ராகுல் காந்தி
குமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், சேதங்களை பார்வையிடவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி இன்று வருகிறார். இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று பகல் 11.30 மணி அளவில் குமரி மாவட்டம் தூத்தூரில் உள்ள செயின்ட் யூதா ததேயு கல்லூரி மைதானத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்துக்கு செல்கிறார். அங்கு புயலால் சேதம் அடைந்த பகுதிகள், படகுகள், வள்ளங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
‘ஒகி’ புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரையும், கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களையும் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தூத்தூருக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.