இந்திய அரசியல் சாசனம் – அன்று சொன்னதே இன்றும்!
1949-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள், அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
‘இந்தியில் கையெழுத்து இடுவீர்களா…?’
இதுதான் நமது அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக இரு நாட்கள் நடந்த விவாதத்தின் முடிவில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் கேட்கப்பட்ட கடைசி வினா. இதற்கு அவர் சொன்ன பதில் – ‘ஏன் இதைக் கேட்கிறீர்கள்…?’
“1946 டிசம்பர் 6. அரசியல் சாசன நிர்ணய சபை முதன்முறையாகக் கூடியது. 29 ஆகஸ்ட் 1947 அரசியல் சாசன வரைவுக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 7635 திருத்தங்கள் கமிட்டி முன் கொண்டு வரப்பட்டு, 2473 ஏற்றுக் கொள்ளப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள்; 8 அட்டவணைகள் கொண்டுள்ளது”.
1949ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று காலை பத்து மணிக்கு, ‘இந்திய அரசுச் சட்டம் 1935-ன் திருத்த மசோதா’, சாசன வரைவுக் கமிட்டியின் தலைவர் அம்பேத்கர் அவர்களால் அரசியல் நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார்.
அனைவருக்கும் வாக்குரிமை, மத்திய அரசின் அதிகார வரம்பு, நீதிமன்றங்களின் அதிகாரம், பசு வதை தடுப்பு, மது விலக்கு… என்று பல அம்சங்கள் முன்வைக்கப் பட்டன. இவை எல்லாமே இன்றும் கூட அதன் ‘வாசம்’, ‘வீச்சு’, குறையாமல் உள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது:
‘நீங்கள் பிற மக்களைச் சகித்துக் கொள்ள மாட்டீர்கள்;’
ஃப்ராங்க் ஆண்டனி. ஆங்கிலோ இந்திய உறுப்பினர்; ஒரு வழக்கறிஞர். இவரது வாதம் இப்படிப் போகிறது:
“ஜனநாயகத்தின் உண்மையான உள்ளடக்கம், நோக்கம் பற்றி புரிந்து கொள்ளாமலே பேசுகிறார்கள். தலைகளை எண்ணுவது மட்டுமே ஜனநாயகம் அல்ல”.
‘சட்ட முறைகள் மூலம் அன்றி, வேறு எவ்வகையிலும் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் பறிக்கப்படாது’ என்கிறது உறுப்பு 21. அரசும் நிர்வாகமும் தீர்மானித்தால், தவறாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த ஷரத்து வழி வகுக்கிறது. எனினும், மத்திய அல்லது மாநில அரசுகள் சுட்டிக் காட்டும் ‘சட்ட முறைகள்’, இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு மாறாக அமையாது என்று நம்புகிறேன்.”
மத்திய அதிகாரக் குவியல் போதாது என்று வாதிட்ட இவர், மதுவிலக்குக் கொள்கை, ‘நடைமுறைக்கு ஒத்து வராத, நல்ல லட்சியம்’ என்றார்.
டாக்டர் பட்டாபி சீதாராமய்யா குறிப்பிட் டார்: “மது விலக்கு பற்றி, மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விடப்பட்டு இருக்கிறது. மாநிலங்களுக்கு அதனால் வருவாய் இழப்பு ஏற்படலாம்; ஆனால் எதிர்காலத்தில் அது இந்த நாட்டுக்கே, மிகப் பெரிய நெறி சார்ந்த சொத்தாக இருக்கும்.”
இவர் கூறிய மற்றொரு கருத்து நம்மை ‘அட…!’ சொல்ல வைக்கிறது.
“அரசியல் சாசனம் எந்த அளவுக்கு துல்லியமாக முழுமையாக இருக்கிறது என்பது பொருட்டே அல்ல; ‘பணம்’. அதுதான் கணக்கில் கொள்ளப்படும். ஆண்டுதோறும், 360 கோடி ரூபாய் மத்தியிலும், அதற்கு இணையான தொகை மாநிலங்களிலும் கையாளப்பட இருக்கிறது; (அப்போதைய கணக்கு!!)
இந்தப் பணம் முறையாகச் செலவு செய்யப்படாமல், ஒவ்வொரு அணாவாக பார்த்துப் பார்த்துச் செலவிடும் சாமான் யனைப் பார்த்து அறிவுரை செய்தால் அது, கொள்ளைக்கும் குழப்பத்துக்கும் கொடுங்கோன்மைக்குமே வழி வகுக்கும். இவற்றைத் தடுத்துக் கட்டுப்படுத்த, அரசின் அதிகாரத்தின் கீழ் வராத சுய அதிகாரம் கொண்ட ஆடிட்டர் ஜெனரல் வேண்டும்.”
சாசனத்துக்கு ஆதரவாக, எதிராக பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மாநிலங்களுக்குப் போதிய அளவு நிதி ஆதாரங்கள் வழங்கப்படவில்லை. அரசியல் சாசனம் இந்தியில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்றவை, மாநிலங்களின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கக் கூடாது; கடவுளின் பெயர் எங்கும் குறிப்பிடாதது தவறு; மதச் சார்பின்மை என்பதற்கு பதிலாக எந்த மதத்திலும் தலையிட மாட்டோம் என்று இருந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகள் சொல்லப்பட்டன.
நாம் இங்கே இந்த நிலையில் சுதந்திர நாட்டு மக்களாக இருப்பதற்குக் காரணமான இருந்த மகாத்மா காந்தியின் பெயர் சாசனத்தில் எங்கும் இல்லையே.. என்று ஒரே ஒரு உறுப்பினர் பேசி இருக்கிறார்.
‘நமது வாக்காளர்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கிறார்களே என்று அஞ்ச வேண்டாம்; அவர்களுக்கு மிக நிச்சயமாக போதுமான அளவுக்கு பொது அறிவு இருக்கிறது; தங்களை யார் ஆள வேண்டும் என்பதை வகை பிரித்துப் பார்த்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் திறமை அவர்களுக்கு உண்டு’ என்றும் சில குரல்கள் எழுந்தன.
தொழில்முறை அரசியல்வாதிகளை விடவும் (professional politicians) தொழில்முறை நிபுணர்கள் (political professionals) அரசியலுக்கு வருவது நல்லது. ‘சம்பாதிக்க வேண்டும்’ என்பதில் இருந்து, ‘ஏதேனும் செய்ய வேண்டும்’ என்பதில் அவர்களின் எண்ணம் முனைப் புடன் இருக்கும் என்று அதற்கு வலுவான காரணமும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இன்ப அதிர்ச்சி தரும் ஒரு யோசனை தருகிறார் மகாவீர் தியாகி என்கிற உறுப்பினர்.
“அரசுக் கருவூலம் அல்லது தனியார் நிறுவனத்தில் இருந்து, ஒரு சாமான்ய கூலியை விடவும் அதிகமான ஊதியம் அல்லது லாபத்தை எந்த ஒருவரும் பெற மாட்டார் என்கிற விதி இந்த சாசனத்தில் இடம் பிடித்து இருக்க வேண்டும்”.
மேலும் சொல்கிறார்: “இப்படி ஒரு விதி மட்டும் இருந்து இருந்தால், இங்கே எல்லாமே சரியாக இருக்கும். அப்படி இல்லாத வரையில் இந்த சாசனம், வெறும் கையோடு நிற்பவனை அல்ல; கை நிறைய ரொட்டிகள் உள்ளவனையே பாதுகாக்கும்.”
பொருளாதார சமத்துவம் இல்லாமல், சமதர்ம சமத்துவம் உருவாக சாத்தியமே இல்லை என்பதனால், மகாவீர் தியாகியின் குரல், முற்றிலும் நியாயமாகவே படுகிறது.
ஆனாலும், சாமான்யனின் வாழ்க்கை, ‘வாழத்தக்கதாக’ இருக்க வேண்டும்; அதற்கு இந்த சாசனம் வழி கோலுவதாக, இருந்தாக வேண்டும் என்பதில், சாசனத்தை வடிவமைத்தவர்கள் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறார்கள். ‘சாமான்யனுக்கே இதனைச் சமர்ப்பிக்கிறோம்; இந்த சமர்ப்பித்தலில் நமது நாட்டின் எதிர்கால நம்பிக்கைகள் அடங்கி இருக்கின்றன’ என்கிற கூற்று, இதற்கு சாட்சி.
‘அச்சு உரிமை’ அடிப்படை உரிமை களில் ஒன்றாக இடம் பெற்று இருக்கவேண் டும்’ என்று தன் மனக்குறையை வெளிப் படுத்திய ஓர் உறுப்பினர், அமெரிக்க நிபுணர் ஜெஃபர்சனை மேற்கோள் காட்டுகிறார்:
“பத்திரிகைகள் இல்லாது அரசாங்கம்…. அரசாங்கம் இல்லாது பத்திரிகைகள். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் பின்னதையே தேர்வு செய்வேன்”.
இன்றளவும் இந்தக் கோரிக்கை, மிகத் தீவிர பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஊடகங்களின் பொறுப்பு(ணர்வு) பற்றிப் ‘பெரிய அளவில்’ ஆக்கப்பூர்வ விவாதங்கள், இடம் பெறாமல் போவது ஆச்சரியத்தையே அளிக்கிறது. ஜனநாயகக் குடியரசின் மிக முக்கிய ஒரு தூண், அரசியல் சாசனத்தில், இன்னமும் கூட தனக்கான உரிய இடத்தைப் பெறாமல் இருப்பது விந்தைதான்.
‘அனல் பறக்கும் சூடான விவாதம்’ என்கிற அடைமொழிக்கு சற்றும் பொருந்தி வராத, ‘உப்பு சப்பில்லாத’ உரைகளாகவே அமைந்து இருந்தாலும், ஆழமான அர்த்த புஷ்டியுடன் மிகவும் அவசியமான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கோஷம் இடுதல், கைகலப்பு, கூச்சல் குழப்பம் ஏதும் இன்றி, பயணித்த முதல் நாள் ‘விவாதம்’, மறுநாளும் நீண்டது.
அத்தனை புகார்கள், குறைகள், தவறுகளுக்கும் பதில் சொல்வதாக முத்தாய்ப்பாய் அமைந்தது, வரைவுக் கமிட்டியின் தலைவராக பாசாஹிப் டாக்டர் அம்பேத்கார் கூறிய இந்த வாசகம்:
“இந்த சாசனத்தின் தரத் தகுதிக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னதான் நல்ல சாசனமாக இருந்தாலும், அதனைக் கையாள்வோர் தீயவராக இருந்தால் தீயதே விளையும்; சாசனம் எத்தன்மையதாய் இருப்பினும், அது நல்லவர் கைகளில் நன்மையே விளைவிக்கும்”.
1949 நவம்பர் 26 சனிக்கிழமை. 395 பிரிவுகள், 8 அட்டவணைகளுடன் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சபையை ஒத்தி வைத்த ஜனாதிபதி, உறுப்பினர்களின் இருப்பிடத்துக்கு வந்து ஒவ்வொருவரிடமும் தான் கைகுலுக்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் ஜவஹர் லால் நேரு, ‘நாங்கள் ஒவ்வொருவராக வந்து உங்களுடன் கைகுலுக்குகிறோம்’ என்று சொன்னார். அதுபடியே நடந்தது.
ஆமாம்… நிறைவாக குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், எந்த மொழியில் கையெழுத்து இட்டார்…?
இந்தியிலா…? ஆங்கிலத்திலா..?
ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட உறுப் பினர்கள், ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டனர்.
குடியரசுத் தலைவர் இந்தியில் கையொப்பம் இட்டு, அடைப்புக் குறிக்குள் தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதினார்!
சுபம்!!