பிரிஸ்பேன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா காயத்தால் விலகல்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா காயத்தால் விலகினார்.
பிரிஸ்பேன் டென்னிஸ்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, 53–ம் நிலை வீராங்கனை அலெக்சாண்ட்ரா குருனிச்சை (செர்பியா) சந்தித்தார்.
காயத்தால் முகுருஜா விலகல்
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முகுருஜா முதல் செட்டை 7–5 என்ற கணக்கில் தனதாக்கினார். அடுத்த செட்டில் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் முகுருஜா திணறினார். அந்த செட்டை அவர் 6–7 (3–7) என்ற கணக்கில் குருனிச்சிடம் பறிகொடுத்தார். 2–வது செட் ஆட்டம் முடிந்ததும் ஆடுகளபகுதியில் பிசியோதெரோபிஸ்சிடம் சிகிச்சை பெற்று முகுருஜா களம் திரும்பினார்.
வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் முகுருஜா 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மீண்டும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அவர் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் அலெக்சாண்ட்ரா குருனிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால்இறுதிக்கு முன்னேறினார்.
அதிக வெப்பம் காரணமா?
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 15–ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முகுருஜா காயம் அடைந்துள்ளார். அத்துடன் உலகின் நம்பர் ஒன் இடத்தை சிமோனா ஹாலெப்பிடம் (ருமேனியா) இருந்து கைப்பற்றும் வாய்ப்பையும் முகுருஜா காயத்தால் நழுவவிட்டார்.
போட்டியில் இருந்து வெளியேறிய முகுருஜா அளித்த பேட்டியில், ‘2–வது செட்டில் நான் 2–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போதே காயம் பிரச்சினை தொடங்கி விட்டது. ஆட்டம் போக, போக இரு கால்களின் பின்பகுதிகளில் வலி அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஆட்டத்தில் இருந்து விலக நேர்ந்தது. தசைப்பிடிப்பு எனக்கு ஏற்படுவது அரிதான விஷயமாகும். அதிக வெப்பம் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
லாத்வியா வீராங்கனையுடன் மோதல்
மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை அனாஸ்டாஜியா செவஸ்டோவா 6–2, 6–1 என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை சோரானா சிர்ஸ்டாவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதி ஆட்டத்தில் அனாஸ்டாஜியா செவஸ்டோவா, அலெக்சாண்ட்ரா குருனிச்சை எதிர்கொள்கிறார்.
இன்னொரு ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2–வது இடம் பிடித்த அலிஸ் கொர்னெட் (பிரான்ஸ்) 6–1, 7–5 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை மிர்ஜனா லூசிச் பரோனியை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
மில்லர் அதிர்ச்சி தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் 21 வயதான தென்கொரியாவின் ஷூங் ஹயோன் 6–3, 7–6 (7–1) என்ற நேர்செட்டில் ஜிலெச் முல்லருக்கு (லக்சம்பர்க்) அதிர்ச்சி அளித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தகுதி சுற்று வீரர் மிச்செல் மோக் (அமெரிக்கா) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் பெடேரிகோ டெல்போனிஸ்சை (அர்ஜென்டினா) சாய்த்து 2–வது சுற்றுக்குள் நுழைந்தார்.