சசிகலாவை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும்: கர்நாடக அமைச்சர்
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என கர்நாடகா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததாவது: சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற புகார் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவசியம். விசாரணைக்கு கால அவகாசம் எதுவும் கொடுக்கவில்லை. விரைவில் விசாரணை முடிந்து அறிக்கை கிடைக்கும். லஞ்ச விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அனுபவித்து வருகின்றனர். இதில், சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், இதற்காக டிஜிபி சத்தியநாராயண ராவ்வுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இது குறித்து வினய்குமார் கமிஷன் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.