‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமல்
தமிழக சட்டசபையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகளில் பேசிய எம்.எல்.ஏ.க்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மண்டலத்திற்கு ஆயிரம் கள உதவியாளர் மற்றும் பிற மண்டலங்களுக்கு ஆயிரம் கள உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன, இடஒதுக்கீடு அடிப்படையில், நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 150 உதவி பொறியாளர் (மின்னியல்), 25 உதவி பொறியாளர் (சிவில்), 25 உதவி பொறியாளர் (எந்திரவியல்) மற்றும் 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன, இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியில் புதிய வட்டம் அமைக்கப்படும். மேற்பார்வை பொறியாளர் (சென்னை வளர்ச்சி வட்டம் திட்டங்கள்) என்ற ஒரு புதிய வட்டம், சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்படும்.
உதகமண்டல மின் பகிர்மான கோட்டத்தை இரண்டாக பிரித்து, கூடலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான கோட்டம் அமைக்கப்படும்.
தாம்பரம் மின் பகிர்மான கோட்டத்தை இரண்டாக பிரித்து, பல்லாவரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான கோட்டம் அமைக்கப்படும்.
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சம்;
7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம்;10 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம்; 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இந்த ஆண்டும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்கள் ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிறுவுவதற்கும், தேவையான ஊக்கம் மற்றும் வசதிகளை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செய்து கொடுக்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, சொந்த நிலங்களை உடைய பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும்.
விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் சூரிய மின் உற்பத்தி செய்து அதனைத் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு விற்பனை செய்வதற்கும் தேவையான ஊக்கத்தையும், உதவிகளையும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செய்யும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு மறுவாழ்வுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்படும். குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 26 ஆயிரத்து 463 சில்லரை விற்பனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பு ஊதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சில்லரை விற்பனை பணியாளர்களான மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளிலும் முறையே ரூ.500, ரூ.400 மற்றும் ரூ.300 என தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.750, ரூ.600 மற்றும் ரூ.500 என உயர்த்தி வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வுகள், செப்டம்பர் 2018 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஆயிரத்து 287 மேற்பார்வையாளர்களும், 15 ஆயிரத்து 532 விற்பனையாளர்களும் மற்றும் 3,644 உதவி விற்பனையாளர்களும் பயன்பெறுவார்கள்.
மரணமடையும் டாஸ்மாக் சில்லரை விற்பனைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு உதவித்தொகை ரூ.1.50 லட்சம், குடும்பநல நிதியில் இருந்து (குழு காப்பீட்டுத் திட்டம்) வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இந்த தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக பணியாளர்களின் தொகுப்பு ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.60 பிடித்தம் செய்யப்படும்.
இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டார்.