தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
அரபிக் கடலில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று பலமாக வீசுவதால், தமிழம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்திலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோ ரப் பகுதிகளில் 45 கிமீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.
அதன் காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதியில் 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே, தென் கடலோரப் பகுதி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடியுடன் மழை
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உரு வாகக்கூடும்.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவையில் 2 செமீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.