லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பின்னர் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்காத அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இதே கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே திட்டமிட்டபடி நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்தார்.
அதன்படி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம்வகிக்கும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.
தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். போராட்டம் நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.