சேலம், தருமபுரி மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.3 ஆக பதிவு; பாதிப்பு ஏதும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தகவல்
சேலம், தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாநகர், அயோத்தியா பட்டணம் மற்றும் ஓமலூர், காடை யாம்பட்டி வட்டாரங்களில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால், மக்களிடையே, பதற்றமும் அச்ச மும் காணப்பட்டது.
இதுகுறித்து சேலம் ஆட்சியர் ரோஹிணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் ஆகிய வட்டாரங்களில் காலை 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 11.6 அட்சரேகை வடக்கு மற்றும் 78.1 தீர்க்கரேகை கிழக்கு பகுதியில் 15 கிமீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சேலம் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுபோன்ற நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொது மக்கள் பதற்றமின்றி இருக்க வேண்டும்.
ஜன்னல்கள், கண்ணாடி கதவு கள், அலமாரிகள் உள்ளிட்டவற்றின் அருகில் நிற்க வேண்டாம். மின்தூக்கியை உபயோகப்படுத்த வேண்டாம். பாலங்கள், உயர் மின் அழுத்த கம்பிகள், விளம்பர பலகைகள் அருகில் நிற்க வேண் டாம். மேலும் நெருக்கமான கட்டிடங்களைத் தவிர்த்து சம வெளிப்பகுதியில் பாதுகாப்பாக நிற்க வேண்டும். பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல் களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தருமபுரி மாவட் டம் நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, கம்பை நல்லூர், பெரும்பாலை, ஏரியூர், நாகமரை, சின்னம்பள்ளி, பழையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சில நொடிகள் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கம் குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் மற்றும் கோள்கள் ஆய்வு மைய இயக்குநர் அன்பழகன் கூறியதாவது:
நீர் தேக்கத்தில் நீர் நிரம்பும்போது நிலத்தடியில் ஒரு அழுத்தம் பர வும். இதுபோன்ற நேரத்தில் அணை வட்டார பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்படுவது இயற்கை. ஆனால், இந்த நிலநடுக்கம் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்திலும் பதிவாகி உள்ளது. அதனால், இது மேட்டூர் அணை நிரம்பியதால் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று கூற வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு அணை கட்டப்படும் முன்னர் அந்த இடத்தில் ஏற்படக்கூடிய நில அதிர்வுகளை கணக்கிட்டு அதை தாங்கக்கூடிய வகையில்தான் அணைகள் கட்டப்படும். மேட்டூர் அணை அமைந்துள்ள நிலம் சார்னகைட் என்ற கெட்டியான பாறை வகையைக் கொண்டது. அதனால், நிலநடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இருந்த பழமையான சீஸ்மோகிராப் கருவி மூலம் நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இப்போது, ஆன்லைன் சீஸ்மோகிராப் கருவி பயன்படுத்தப்படுவதால், சேலத்தில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்த விவரம் டெல்லியில் இருந்து மட்டுமே பெறப்படுகிறது