தமிழகம், புதுவை கடலோரப் பகுதியில் மீனவர்கள் கவனமாக செல்ல வானிலை மையம் அறிவுரை
தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் செல்லும்போது மீனவர்கள் கவனமாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் மீனவர் கள் செல்லும்போது கவனமாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதி மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி மேகங்கள் உருவாகி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.