காஷ்மீரில் காவலரை கடத்திக் கொன்ற 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் பயிற்சி காவலரை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கருதப்படும் 3 தீவிரவாதிகள் நேற்று என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர்.
குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது சலீம் ஷா காவலராக பணியில் சேர்ந்து, கதுவாவில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த அவரை 2 தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். சடலம் ரெட்வானி பயீன் கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “ஷாவின் உடலை ஆய்வு செய்ததில், சித்தரவதை செய்து கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் காவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகள் குல்காம் மாவட்டம் ரெட்வானி பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் காலையில் (நேற்று) சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காவலரை கடத்திக் கொன்றது இவர்கள்தான் என தெரியவந்துள் ளது. மேலும் இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
காஷ்மீரில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இதையடுத்து ஜூன் 20-ம் தேதி காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதன் பிறகு தீவிரவாத தாக்குதல்கள் சற்று குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 15 வரையிலான ஒரு மாதத்தில் 47 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன. அதற்கு முந்தைய ஒரு மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்ட போதிலும் 80 தாக்குதல்கள் நடந்தன.
இதுபோல கடந்த ஒரு மாதத்தில் 14 தீவிரவாதிகளும் 5 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் முந்தைய மாதத்தில் 24 தீவிரவாதிகளும் 10 வீரர்களும் கொல்லப்பட்டனர். அதேநேரம் ஆளுநர் ஆட்சியின்போது கல் வீச்சு சம்பவங்கள் 95 ஆகவும் முந்தைய மாதத்தில் 90 ஆகவும் இருந்தது.