சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள் ட்ரம்ப். ஈரான் அதிபர் எச்சரிக்கை
அமெரிக்கா எங்களுடன் மோதும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய போராக மாறும், ங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள் ட்ரம்ப், விளைவு மிக மோசமாக இருக்கும் என ஈரான் அதிபர் ரவுஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார் ட்ரம்ப். இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இதற்கு பதிலடியாக, ”அனுபவ முதிர்வு இல்லாதவர்களின் பேச்சு பலனற்றது. தடை விதித்தால் பதில் நடவடிக்கை நிச்சயம்..”என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் சர்வதேச நீதிமன்ற உதவியை ஈரான் நாடியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுஹானி கூறுகையில் ‘‘ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது இதுவரை இல்லாத அளவு மிக மோசமான போராக மாறும். இதுவரை நடந்த போருக்கெல்லாம் தாய் போராக அது இருக்கும். சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் ட்ரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும்’’ என எச்சரித்துள்ளார்.