சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பரிதாப பலி
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படியில் தொங்கிச் சென்றபோது தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் அடிபட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே இன்று பலியாகினர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
சென்னை கடற்கரை தாம்பரம் இடையே தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- திருமால்பூர் இடையிலான ரயில்களும் இதே மார்க்கத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. பரபரப்பான காலை, மாலை நேரங்களில் இந்த ரயில்களில் கூட்டமும் அதிகம் காணப்படும்.
கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே மின்சார ரயில் செல்லும் பாதையில் உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் சாதாரண மின்சார ரயில்கள் இன்று இயக்கப்பட்டன. காலதாமதத்துடன் குறைவான ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலும் அதிகமானது.
இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூரை வரை செல்லும் மின்சார ரயில் பரங்கிமலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கியபடி பயணம் செய்த 7 மாணவர்கள் கீழே விழுந்தனர் . அவர்களில் பள்ளி மாணவர் பரத், கல்லூரி மாணவர்கள் பிரவீன் குமார், சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும். அதனால்தான் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுகின்றன என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார்.
நேற்று இரவு பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.