ஜப்பானில் வரலாறு காணாத வெயில் ; தவிக்கும் மக்கள்
ஜப்பானில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் சுட்டெரிக்கிறது. 13 நாட்களில் 44 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜப்பானில் தற்போது கோடைகாலம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பநிலை சுட்டெரிக்கிறது. டோக்கியோ அருகில் உள்ள குமகயா நகரில் நேற்று 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதற்கு முன் 2013ல், 41 டிகிரி செல்சியஸ் பதிவானதே உயர்ந்த வெப்பநிலையாக இருந்தது.நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தொட்டுள்ளது. மக்கள் ‘ஏசி’ வசதியுள்ள இடங்களில் இருக்குமாறும், தண்ணீர் அதிகளவில் குடிக்குமாறும், ஜப்பான் பேரிடர் மீட்பு ஆணையம் மக்களை உஷார்படுத்தியுள்ளது.ஜப்பானில் 42 சதவீத அரசு பள்ளிகளில் மட்டுமே, ‘ஏசி’ வசதி உள்ளது. இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘ஏசி’ எண்ணிக்கையை அதிகரித்தால், அதுவே வெப்பநிலை அதிகரிப்புக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் காரணமாக அமையும்என்பதால், ‘ஏசி’ பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஒரு குழு தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகிறது. தகிக்கும் வெயில்காரணமாக சோர்வு, துாக்கமின்மை, உடல் வறட்சி, தலைவலி போன்ற உடல் பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.இதற்கு முன், இந்த மாதத்தில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 200 பேர் பலியாகினர். 4500 பேர் வீடுகளை இழந்து தற்போதும் தற்காலிக கூடாரங்களில் உள்ளனர்.