1980 ஆகஸ்ட் மாதம் அம்ருதா பிறந்தார் என்றால் ஜூலையில் நடந்த திரைப்பட விழாவில் ஜெயலலிதா பங்கேற்றது எப்படி?- உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி
கடந்த 1980 ஆகஸ்ட் மாதம் அம்ருதா பிறந்தார் என்றால், அதே ஆண்டு ஜூலை மாதம் நடந்த பிலிம்ஃபேர் திரைப்பட விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதுப்பொலிவுடன் பங்கேற்றது எப்படி என அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் அம்ருதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது.
அப்போது நடந்த வாதம் வருமாறு:
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ்: என்.டி.திவாரி வழக்கில் மரபணு சோதனைக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதேபோல இந்த வழக்கிலும் அம்ருதாதான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே மரபணு சோதனைக்கு உத்தரவிட முடியும் என அதே உச்ச நீதிமன்றம் மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞர் பிரகாஷ்: சந்தியா வுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா, சைலஜா ஆகிய 3 பேருமே வாரிசுகள்தான். சைலஜாவை இவர்கள் ஏற்கவில்லை என்பது தான் பிரச்சினை. சந்தியாவின் கணவர் மறைந்த பிறகுதான் சைலஜா பிறந்துள்ளார். அதனால் தான் அவர் பெங்களூருவில் வளர்ந்துள்ளார்.
அரசு பிளீடர் ராஜகோபாலன்: இந்த குற்றச்சாட்டை தனது தாயார் மீது சுமத்தியதால்தான் ஜெயலலிதா அப்போதே சைலஜா மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கறிஞர் பிரகாஷ்: ஜெய லலிதாவின் மகள்தான் அம்ருதா என்ற உண்மையை சைலஜா கடைசி காலத்தில்தான் தெரிவித்துள் ளார். இதை நிரூபிக்க அம்ருதாவின் ரத்த மாதிரியையும், தீபாவின் ரத்த மாதிரியையும் எடுத்து மரபணு சோதனை நடத்த வேண்டும்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: சைலஜா நன்றாக படித்து விமான நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றால் இந்த உண்மைகளை ஏன் அப்போதே வெளியே சொல்லவில்லை? தற்போது சைலஜா யார் என்பதும் கேள்விக்குறி. அம்ருதா யார் என்பதும் கேள்விக்குறி. ஜெய லலிதா மரணமும் கேள்விக்குறி.
வழக்கறிஞர் விஜய் நாராயண்: 1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக கூறியுள்ளார். ஆனால் அதே ஆண்டு அதாவது 1980 ஜூலை மாதத்தில் நடந்த பிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா நிறைமாத கர்ப் பிணியாக இல்லாமல் புதுப் பொலிவுடன் பங்கேற்றது எப்படி? (பின்னர் அதற்கான யூ-டியூப் வலைதளத்தின் வீடியோ சிடி ஆதாரத்தையும் தாக்கல் செய்து அதை நீதிபதிக்கும் லேப்-டாப் மூலமாக போட்டு காண்பித்தார்)
1996 முதல் 2006 வரை பலமுறை ஜெயலலிதாவை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஒருமுறை கூடவா அவரால் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் பார்த்தது போல் உள்ளது.
இவ்வாறு வாதம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.