அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்ட நிலையில் 18 எம்எல்ஏ-க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?- டிடிவி தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதம்
கட்சி, சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தை மீறி பேரவைத் தலைவர் எப்படி 18 பேரை தகுதி நீக்கம் செய்ய முடியும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதிட்டார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க் கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராய ணன் முன்பாக கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் நேற்று ஆஜராகி வாதிட்டதாவது:
இந்த தகுதி நீக்கம் நடந்தபோது அதிமுக என்ற கட்சியே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அதிமுக இரு அணிகளாக இருந்தது. தகுதி நீக்கம் செய்யும்போது முதல்வர் அந்த அணியின் சார்பில்தான் பேரவைத் தலைவருக்கு பதிலளித்துள்ளார். அதிமுக என்ற கட்சியே இல்லாதபோது அதிமுக கொறடா எப்படி தகுதிநீக்கம் செய்யச் சொல்லி பரிந்துரைக்க முடியும்?
அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு தொடர்பாக தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவு எடுக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 2 அணிகளாகத்தான் இருந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்றபிறகு இந்த அணிகள் கே.பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 3 அணிகளாகிவிட்டது. கடைசியில் கே.பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சேர்ந்துவிட்டோம் எனக் கூறியதால் கட்சியும், சின்னமும் அவர்களுக்கு சென்றது. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தை மீறி 18 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது. அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியபோது, தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் என்னால் நடவடிக்கை எடுக்க இயலாது என தெரி வித்த அதே பேரவைத் தலைவர்தான் தேர்தல் ஆணை யத்தின் பணியில் குறுக்கிட்டு இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
அவர் அப்பட்டமாக உள் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார் என்பது இதில் இருந்தே நிரூபணமாகிவிட்டது. எனவே இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இத்துடன் தினகரன் தரப்பு வாதம் நிறைவடைந்தது. 3-வது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்க உள்ளது. இன்று பேரவைத் தலைவர் தரப்பில் வாதிடப்பட உள்ளது.