சிறை செல்வதை தவிர்க்க மல்லையா புதிய திட்டம்
வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை இந்தியா அழைத்து வர அமலாக்கத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தியா திரும்பி வர மறுத்ததுடன், தேர்தல் நெருங்குவதாலேயே தன்னை இந்தியா அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் தற்போது, இந்தியா திரும்ப விரும்புவதாகவும் கடன்களை அடைப்பதற்கான திட்டம் வகுக்கத் தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விஜய் மல்லையா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டன் கோர்ட்டில் நடந்து வரும் விஜய் மல்லையா மீதான வழக்கின் விசாரணையில், இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இது மல்லையாவுக்கு எதிராக அமையும் பட்சத்தில், அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்காகவே விஜய் மல்லையா இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தால் லண்டனை விட்டு வெளியேற்றப்பட்டு, விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட்டால் அவர் சிறையில் அதிக நாட்கள் இருக்க வேண்டியிருக்கும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறை செல்வதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.