Breaking News
இந்தியா-எஸ்செக்ஸ் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் இன்று தொடக்கம்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஆடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதன்படி விராட் கோலி தலைமையிலான இந்தியா, கவுண்டி அணியான எஸ்செக்ஸ் அணியை இன்று செம்ஸ்போர்டு மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் 4 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்று இந்திய அணியினர் அங்கு பயிற்சியில் ஈடுபட்ட போது ‘அவுட் பீல்டு’ மிகமோசமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். அவுட் பீல்டில் போதிய புற்கள் இல்லை. இத்தகைய மைதானத்தில் பீல்டிங் செய்யும் போது வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு.

பிரதான ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருக்கிறது. அதற்கு நேர் எதிராக இந்திய அணி வீரர்களுக்கு தனியாக வழங்கப்பட்ட இரண்டு பயிற்சி ஆடுகளங்களும் புற்கள் இன்றி வெறுமையாக காட்சி அளித்ததால், அதுவும் இந்திய அணி நிர்வாகத்துக்கு திருப்தி அளிக்கவில்லை. அது மட்டுமின்றி வெயிலும் வாட்டி வதைக்கிறது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு 4 நாள் பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாக இந்திய அணி நிர்வாகம் குறைத்து விட்டது. அதனால் பயிற்சி ஆட்டம் 27-ந்தேதியுடன் நிறைவடைந்து விடும். இந்த ஆட்டத்திற்கு முதல்தர போட்டி அங்கீகாரம் கிடையாது என்பதால் இந்திய அணி 18 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். குல்தீப் யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தங்களது திறமையை பரிசோதிக்க இது சரியான பயிற்சி களமாக இருக்கும்.

ஒரு நாள் குறைக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள எஸ்செக்ஸ் அணி நிர்வாகம், 4-வது நாள் ஆட்டத்தை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.