மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது: மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது செல்லாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது கடந்த 2004 07 காலகட்டத்தில் சன் தொலைக்காட்சிக்காக கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 1 கோடியே 78 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன் னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கெளதமன் மற்றும் சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ கடந்த 2013-ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நடராஜன், கடந்த மார்ச் 14-ம் தேதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது.
அப்போது நீதிபதி, ‘‘இந்த வழக்கில் இருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எனவே இந்த வழக்கை சிபிஐ நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கான அனைத்து முகாந்திரமும் உள்ளது. மேலும் 12 மாதங்களுக்குள் குற்றச்சாட்டை பதிவு செய்து வழக்கை முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.