டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர்கள் 3 பேரும் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது பட்டினி காரணமாக 3 சிறுமிகளும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 சிறுமிகளும் அக்காள், தங்கைகள். இந்த சிறுமிகளில் இளைய சகோதரிக்கு 2 வயதும், அடுத்த சகோதரிக்கு 5 வயதும், மூத்த சகோதரிக்கு 8 வயதும் இருக்கும். சிறுமிகளின் தந்தை ரிக்க்ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக்க்ஷா காணாமல் போய் விட்டது.
பிழைப்புக்கு வழி இல்லாததால், தனது நண்பர் ஒருவரது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 சிறுமிகளும் இறந்து உள்ளனர். சிறுமிகள் இறப்பு முதலில் இயற்கையான இறப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து சில மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.
எனவே சிறுமிகளின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே சிறுமிகள் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது.