மியான்மரில் நிலச்சரிவில் 27 சுரங்கத் தொழிலாளர் பலி
மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் விலை உயர்ந்த பச்சைக் கல் சுரங்கம் அமைந் துள்ளது. இந்த சுரங்கத்திலிருந்து பச்சைக் கற்களை வெட்டி, அவற்றைசீனா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு பல கொள்ளைக் கும்பல்கள் கடத்தி வருகின்றன.
இந்த சுரங்கத்துக்குள் சென்று பச்சைக் கற்களை வெட்டி எடுத்து வருவதற்காக, அங்குள்ள செட்-மூ என்ற கிராமத்தைச் சேர்ந்த ரவாங் என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்தக் கொள்ளைக் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை, அந்த சுரங்கத்துக் குள் 27 தொழிலாளர்கள் பச்சைக் கற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பலத்த மழை பெய்ததால் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவானது அந்த சுரங்கத்தை முழுவதுமாக மூடியது. இதில், அந்த சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 27 பேரும் உயிருடன் புதைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும், மியான்மர் ராணுவத்தினரும், தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மழை பெய்து கொண் டிருப்பதால் மீட்புப் பணி தாமத மாவதாக கூறப்படுகிறது.
எனினும், சுரங்கத்துக்குள் புதைந்து பல மணிநேரம் ஆகிவிட்டதால் அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு குறைவு என ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.