Breaking News
அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் மருமகனுக்கு மூத்த ஆலோசகர் பதவி ஜனநாயக கட்சி போர்க்கொடி

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் மருமகனுக்கு மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நியமனத்துக்கு எதிராக ஜனநாயக கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

முக்கிய பதவி
அமெரிக்க ஜனாதிபதியாக 20–ந் தேதி டொனால்டு டிரம்ப் (வயது 70) பதவி ஏற்க உள்ளார். அதற்கு இடையே ஜனாதிபதி மாளிகையிலும், அரசின் முக்கிய பதவிகளிலும் நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னருக்கு (36) அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்பின் கணவர் ஆவார்.

டிரம்ப் வெற்றியில் முக்கிய பங்கு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிட்டபோது, அவர் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியில் இருந்து போட்டியிட களம் இறங்கிய நியூஜெர்சி மாகாண கவர்னர் கிறிஸ் கிறிஸ்டியை போட்டியில் இருந்து விலக செய்தவர் இவர்தான் என்று நம்பப்படுகிறது.

புகழாரம்
ஜேரட் குஷ்னரை ஜனாதிபதி மாளிகையின் முக்கிய ஆலோசகராக நியமித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஜேரட் மிகப்பெரிய சொத்தாக திகழ்ந்து வந்துள்ளார். பிரசாரம் முழுமைக்கும் நம்பத்தகுந்த ஆலோசகராக விளங்கினார். அவரை எனது நிர்வாகத்தின்கீழ் முக்கிய தலைமைத்துவத்தில் பணியாற்ற பெறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்’’ என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

குஷ்னர், டிரம்பைப் போன்று ரியல் எஸ்டேட் துறையில் மன்னனாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கும் பதவி?
பிரசித்தி பெற்ற ‘போர்ப்ஸ்’ பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப் பேச்சில் மக்கள் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ளனர்’’ என கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

டிரம்ப் தனது மகள் இவாங்கா டிரம்புக்கும் ஜனாதிபதி மாளிகையில் முக்கிய பதவி வழங்கக்கூடும் என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சி போர்க்கொடி
இதற்கு இடையே டிரம்ப், தனது மருமகனுக்கு ஜனாதிபதி மாளிகையில் முக்கிய பதவி வழங்கி இருப்பதற்கு எதிராக ஜனநாயக கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

குடும்பத்தினருக்கு பாரபட்சமாக பதவி வழங்குவதற்கு எதிரான சட்டங்களையும், மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டி, இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் இந்த நியமனம், குடும்பத்தினருக்கு பாரபட்சமாக பதவி வழங்குவதற்கு எதிரான சட்டத்தை மீறிய செயல் அல்ல என்று குஷ்னரின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த நியமனம் தொடர்பான சட்ட பிரச்சினைகளை ஆராய வேண்டும் என்று நீதித்துறையும், அரசு நெறிமுறை அலுவலகமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.