வாஜ்பாய் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான வாஜ்பாய் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 50 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடு போற்றும் வகையில் பணியாற்றிய வாஜ்பாய் 3 முறை பிரதமராக நாட்டிற்கு தொண்டாற்றியவர். எல்லோரும் மதிக்கும் வகையில் வாழ்ந்த அவரின் மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
வாஜ்பாய் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், அவர்மீது அன்பும், மரியாதையும் கொண்டிருக்கும் பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தி.மு.க. சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியுடன் அன்பும், நட்பும் பாராட்டிய தலைவர். ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் கூட்டப்பட்ட டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தார். கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உருவாக்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக எத்தனையோ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும், தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட, தி.மு.க. ஆட்சியை அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக கலைக்க முடியாது என்று உறுதிபடக் கூறி அதன்படியே நின்றார்.
ஜனநாயகத்தின் பக்கம் நின்றவர்
தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி நிலையான போற்றத்தகுந்த ஆட்சியை நாட்டுக்கு வழங்கினார். நாட்டின் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோருக்கும் நினைவுபடுத்தும். வாஜ்பாய் ஒரு நல்ல கவிஞர் மட்டுமல்ல. மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி. அறிஞர் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்து உரையாற்றிய போதெல்லாம் அவருக்கு ஊக்கமளித்து உறுதுணையாக நின்றவர் வாஜ்பாய். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடியவரும், அனைவரையும் கவரும் அற்புதமான பேச்சாற்றல் மிகுந்தவருமான வாஜ்பாய் இழப்பு நாட்டிற்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஏ.கே.தாஜூதீன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் ஆ.மணி அரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், ‘மாபெரும் தலைவரான வாஜ்பாய் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.