கேரள மாநிலத்திற்கு நிதியுதவி: டெல்லி அரசு ரூ.10 கோடி, பஞ்சாப் அரசு ரூ.5 கோடி
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 2, 23, 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சகோதர சகோதிரிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்க அனைவரும் கேட்டுக்கொள்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லியை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரளத்துக்கு பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதாக அறிவித்துள்ளார்.
கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்குக்கு நேரடியாக 5 கோடி ரூபாய் மாற்றப்படுவதாகவும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.