கேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: மழை, வெள்ள சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பார்வையிடுகிறார். அங்கு பல மாவட்டங்களுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு இடர்பாடுகளால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்தவகையில் மொத்தம் 331 வீடுகள் முற்றிலும் இடிந்தும், 2526 வீடுகள் பகுதி இடிந்தும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவங்களில் 41 பேர் காயமடைந்துள்ளனர். 11 பேர் மாயமாகி இருக்கின்றனர்.
இதைப்போல 3200 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி இருக்கின்றன. இவ்வாறு சேதமடைந்த பயிர்கள் மற்றும் வீடுகளின் மதிப்பு ரூ.68.27 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர்.
சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் மண் சரிந்தும், வெள்ளம் சூழ்ந்தும் இருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக எர்ணாகுளம், திரிச்சூர் இடையே பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று வரையே விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் மட்டுமே 106 பேர் பலியாகி இருப்பது மாநிலத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர்.
இதற்காக நேற்று முதல் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, சாலக்குடி போன்ற பகுதிகளில் தத்தளித்து வரும் மக்களை மீட்க உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் 1568 முகாம்களில் 52,856 குடும்பங்களை சேர்ந்த 2.23 லட்சம் பேர் தங்கியிருக்கின்றனர்.
எனினும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை மீட்குமாறு சமூக வலைத்தளங்களில் உதவிகேட்டு கதறி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களது உறவினர்களும் உதவிகேட்டு ஊடகங்கள் வழியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டெல்லியில் நேற்று மாலையில் நடந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கேரளாவுக்கு புறப்பட்டார். இன்று (சனிக்கிழமை) அவர், மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள் என தெரிகிறது.
முன்னதாக நேற்று காலையில் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மாநில வெள்ள நிலவரங்களை கேட்டறிந்தார். இந்த இயற்கை பேரிடரை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர், இது தொடர்பாக மாநில முதல்-மந்திரியுடன் தொடர்ந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 8 மாவட்டங்களில் 17 மற்றும் 18-ந் தேதிகளில் (இன்று) பலத்த மழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கொடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளுக்கான செலவுக்காக மது வகைகளின் சுங்கவரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கு நவம்பர் 30-ந் தேதி வரை சுங்கவரி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.