கேரளாவிற்கு ரூ.500 கோடி நிதி: பிரதமர்
கொச்சி: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ரூ.500 கோடி நிதி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆலோசனை
கேரளாவிலகனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். கொச்சியில் சேதத்தை விமானம் மூலம் பார்வையிட்ட அவர், தொடர்ந்து கனமழை பெய்ததால், பிரதமர் பயணம் செய்த விமானம் ஹெலிகாப்டர் தளத்திற்கு திரும்பியது. தொடர்ந்து கொச்சியில், கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
அறிவிப்பு
அப்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ரூ.500 கோடி நிதியை முதல்கட்டமாக ஒதுக்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பின்னர் மீண்டும் கவர்னர் சதாசிவத்துடன் பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத இடங்களை பார்வையிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரளாவில் ஆய்வு செய்த பினனர், ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
கேரளாவிற்கு குவியும் உதவி
இதனிடையே, வெள்ளத்தினால், பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ரூ.25 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும், குடிநீர் சுத்தகரிப்பு கருவிகளும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி வழங்கப்படும் என ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.