பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவிய சித்துவுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம்
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்தக் கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் என தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் இம்ரான்கான் 176 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். நாட்டின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான்கான் பதவி ஏற்கும் விழா நேற்று நடந்தது.
இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.
விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகியான சம்பீத் பத்ரா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவும்பொழுது, இந்தியாவில் உள்ள ஒன்றுமறியாத பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை அந்நாட்டு ராணுவம் எப்படி கொலை செய்தனர்? என சித்துவுக்கு நினைவுக்கு வரவில்லையா? என கேட்டுள்ளார்.
ராகுல்ஜி நீங்கள் சித்து பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கினீர்களா? சித்து இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கு முன் அவரை சஸ்பெண்டு செய்வீர்களா? என்றும் கேட்டுள்ளார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாகிஸ்தானுக்கு சென்று அந்நாட்டை புகழ்ந்து பேசியுள்ளனர். இன்று சித்துஜி பாகிஸ்தானின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார். எதற்காக அவர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்? தீவிரவாதிகளை அனுப்பியதற்காகவா?, ஒன்றுமறியாத மக்களை கொன்றதற்காகவா?, நமது ராணுவ வீரர்களை கொன்றதற்காகவா? என்றும் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.