கேரளாவில் வெள்ளம்: கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை மீட்கும் முயற்சியில் விலங்கு நல ஆர்வலர்கள்
‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் இயற்கை வளம் மிக்க கேரளா, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சீர்குலைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்த மழையாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், கடலோர காவல்படையினர், தீயணைப்பு படையினர், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பாறைகள், மண் குவியலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். தற்போது மழை குறைந்து இருப்பதால் வெள்ளநீர் வடிய தொடங்கி இருக்கிறது. நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில், கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை மீட்கும் பணியில் விலங்கு நல ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐதாரபாத்தை சேர்ந்த ஹூமைன் சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு, விலங்குகளை மீட்பதற்காக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதே போல், கர்நாடக மாநிலத்தில் கூர்க் பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள விலங்குகளையும் மீட்க பிரத்யேக ஏற்பாட்டை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து அந்த அமைப்பு செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் போது, பல இடங்களில், செல்லப்பிராணிகளை படகுகில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் பாதித்த மக்கள் வேறு வழியின்றி நாய்கள், பூனைகள் போன்றவற்றை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக கொச்சி, கோட்டயம், ஆழப்புழா, ஆகிய மாவட்டங்களில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை மீட்டு கொண்டு வருமாறு எங்களுக்கு 24 மணி நேரமும் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது” என்று ஹுமைன் சொசைட்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.