Breaking News
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டாலும் கடும் நடவடிக்கை: போலீஸ்

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று உறுதி அளித்தார். பின்னர், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 31-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஹெல்மெட் அணிவது கட்டாயமக்கப்படும் என்று டிஜிபி சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால், வாகனம் ஓட்டுபவர், பயணிப்பவர் ஆகிய இருவர் மீது வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மட் அணிவதன் அவசியம் பற்றி சென்னையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.