250 டிரான்ஸ்பார்மர்கள், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகள் தமிழக அரசு சார்பாக கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அப்போது தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் (அ.தி.மு.க.) தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எந்த தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு பயம் கிடையாது. குற்றம் சொல்லும் கட்சிக்காரர்களுக்குதான் பயம்.
வெள்ளத்தால் கேரள மாநிலம் பாதித்துள்ளது. கேரள அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பாக கேரளாவுக்கு 250 டிரான்ஸ்பார்மர்களும், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்) நியமனத்திற்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. எனவே இந்த ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் (கடந்த ஆண்டு சைக்கிள் வாங்காதவர்கள்) விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.