கேரளாவில் நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரிகள் 2 பேர் கைது
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடு, வாசல்களை இழந்த லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும், நிவாரணப் பொருட்களை மனித நேயத்துடன் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கு கேரள அரசு அதிகாரிகள் குழுக்களையும் அமைத்து உள்ளது.
ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாய் நிவாரணப் பொருட்கள் வினியோகிப்பதை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த அரசு அதிகாரிகள் இருவர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி அவற்றை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பனமரம் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு மாநில அரசு ஒரு முகாமை அமைத்து உள்ளது. இங்கு ஏராளமான நிவாரணப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் அங்கு இருந்த அரசு அதிகாரிகள் எஸ்.தாமஸ் மற்றும் எம்.பி.தினேஷ் ஆகியோர் முகாமில் இருந்து சில வாகனங்களில் நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரித்தபோது பக்கத்தில் உள்ள மற்றொரு முகாமிற்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக ஏற்றுவதாக தெரிவித்தனர்.
இதை நம்ப மறுத்த பனமரம் கிராம மக்கள் இதுபற்றி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அரசு அதிகாரிகள் இருவரிடம் விசாரித்தபோது, நிவாரண பொருட்களை அவர்கள் திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தாமஸ், தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஆலப்புழை மாவட்டம் செங்கனூர் நகரில் உள்ள ஒரு நிவாரண முகாமில் இருந்து நிவாரண பொருட்களையும் திருடி வெளியே கொண்டு செல்ல முயற்சி நடந்தது. இந்த திருட்டில் ஈடுபட்டவர் தற்காலிக அரசு ஊழியர் என்பது தெரியவந்து உள்ளது.