பெண்ணுக்கு முகநூல் மூலம் பாலியல் தொல்லை தம்பதி மீது வழக்குப்பதிவு
கோவை வடவள்ளியை சேர்ந்த 36 வயதான ஒரு பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும், கோவை சோமனூரை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கும் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். இருவரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிலையில் அந்த பெண் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். அதன் பிறகும் அவர்கள் இருவரும் முகநூலில் நட்பை தொடர்ந்தனர். அப்போது ஒருநாள் அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரவிசங்கர், அந்த பெண்ணிடம் மகள் குறித்து கேட்டுள்ளார். இது அந்த பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் ரவிசங்கரிடம் பேசுவதை தவிர்த்தார்.
ஆனாலும் ரவிசங்கர் தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது மகள் குறித்து அவதூறாக அந்த பெண்ணின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ரவிசங்கர் அந்த பெண்ணின் மகளுடைய முகத்தை மார்பிங் செய்து படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும், ஆசிட் வீசிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு ரவிசங்கரின் மனைவி ஸ்ரீமதியும் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது. போலீசில் புகார் செய்வேன் என்று கூறியும் அந்த பெண்ணுக்கு முகநூல் மூலம் தொடர்ந்து பாலியல் தொடர்பாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய வடவள்ளி போலீசார் ரவிசங்கர், அவரது மனைவி ஸ்ரீமதி ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த பெண் சென்னையில் வேலை பார்த்தபோது, இதேபோல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.