பேராசிரியை நிர்மலாதேவி மீது விபசார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் 4 பேரை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து தமிழக கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி அவரும் விசாரணையை முடித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு லாவண்யா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கு தொடர்பாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து, ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 370(3) மற்றும் அதன் உட்பிரிவான 370(1)(ஏ)(இவை விபசார தடுப்பு சட்டப்பிரிவுகள் ஆகும்), 120(பி)(கூட்டு சதி), 354(ஏ), 5(1), (ஏ)(பெண்களின் புகழுக்கு களங்கம் விளைவித்தல்) மற்றும் பெண்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் சட்டப்பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பதிவான நிர்மலா தேவியின் பேச்சுக்களை சி.டி.யில் பதிவு செய்துள்ளோம். இதுதவிர முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் நிர்மலாதேவி பேசிய உரையாடல்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. 160 சாட்சிகளை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது உண்மை தான் என்று பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி சிம் கார்டு, மெமரி கார்டு, லேப்-டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு, தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி, நிர்மலா தேவியின் குரல் மாதிரி சென்னை, மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நடத்த சிறப்பு அரசு வக்கீலாக ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் முதன்மையான புலன் விசாரணை அமைப்பான சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை அறிவியல்பூர்வமாக, நியாயமாக, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்கள் உரிமை தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருவதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்டனர்.