தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது கைதான மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலையாகி இருக்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாகவும், அதற்காக முயற்சி செய்த வக்கீல்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, மாநில பொருளாளர் காளியப்பன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன், செய்தி தொடர்பாளர் மருது உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்த குழுமம் மீண்டும் முயற்சிக்கிறது. டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் வழக்கில் வெற்றி பெற்று திறந்துவிடலாம் என்று நினைக்கிறது. மாநில அரசு திறமையான வக்கீலை கொண்டு அதை தடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது. இதற்காக நிறைய பேர் தியாகம் செய்து இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், அதை மூடுவதற்காக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.