Breaking News
பாலியல் தொல்லை புகார்: ஐ.ஜி.யை பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் செயல்படுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. மீது கூறப்பட்டுள்ள பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்கு பதிலாக அ.தி.மு.க அரசு, அந்த ஐ.ஜி.யைப் பாதுகாப்பதிலேயே முனைப்புடன் செயல்படுகிறது. இந்த புகாருக்கு பிறகு தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் அமைத்துள்ள துறை சார்ந்த விசாரணை கமிட்டியும் (விசாகா கமிட்டி), சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள விசாகா வழக்கு வழிகாட்டுதல்களின்படி இல்லை என்பதால், விசாரணைக்குழு ஏதோ ஆழ்ந்த உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியில் இருக்கும் அனைவருமே காவல்துறையில் பணியாற்றுபவர்கள். பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு வாய்ப்பாக அந்த கமிட்டியில், மகளிர் நலனில் அக்கறையுள்ள தொண்டு நிறுவனத்தின் பெண்மணி ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால், விசாகா கமிட்டியில் காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி சரஸ்வதியை உறுப்பினராக நியமித்து, அந்த வழிகாட்டுதல் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ராமநாதபுரம் அகதிகள் முகாம் அதிகாரியாக இருந்த கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அவரும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். புகாருக்குள்ளான ஐ.ஜி., சி.பி.ஐ.யில் பணியாற்றியபோது அவரின் கீழ் பணியாற்றிய பெண் போலீஸ் அதிகாரி தேன்மொழி மற்றுமொரு உறுப்பினராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, முழுக்க முழுக்க ஐ.ஜி.யை இந்த பாலியல் புகாரில் இருந்து விடுவித்து உதவி செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தான், பெண்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்டு ஒரு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சீமா அகர்வால் தலைமையில் உள்ள விசாகா கமிட்டியில் உடனடியாக தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை மேலும் தாமதமின்றி வேறு துறைக்கு மாற்றி, பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் ஊழல் வழக்குகளை பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி. விசாரிப்பது லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது என்பதால், அவருக்கு பதிலாக நேர்மையான ஒரு ஐ.ஜி.யை லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணை இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும், அதுவரை ஊழல் வழக்குகளின் ஆதாரங்களை திசை திருப்புவதற்கோ, மறைப்பதற்கோ துறை இயக்குனர் இடமளித்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாவிட்டால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல, விசாரணையே ஒரு கண்துடைப்பு என்றாகி, அனைத்தையும் ஊற்றி மூடிவிடும் நிலையே இறுதியில் ஏற்படும் என்று, இப்போதே எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர், டாக்டர், செம்மொழி நாயகர், பன்முக வித்தகர் என எத்தனை புகழ்ப்பட்டங்கள் இருந்தாலும் அவர் இயற்பெயருக்கு நிகராக, பெயருக்கும் மேலாக மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் கருணாநிதி என்பது தானே. அந்த பெயருக்கு அடித்தளமே கலைத்துறை தானே. 75 திரைப்படங்கள், எண்ணற்ற திரை இசைப் பாடல்கள், சின்னத்திரை தொடர்கள் என சிறப்பு முத்திரை பதித்தவர் தலைவர் கருணாநிதி.

ஊடகத்துறையில் கருத்துரிமை காத்த கருணாநிதிக்கு திருச்சியிலும், இலக்கியத்துறையில் முத்திரை பதித்த கருணாநிதிக்கு தமிழ் வளர்த்த மதுரையிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய நிலையில், கலைத்துறையில் “மறக்க முடியுமா கலைஞரை” என்ற நினைவலைகளுடன் கலைத்துறையின் சாதனையாளர்கள் திரைத்துறையின் பெருமக்கள் பங்கேற்ற நிகழ்வு 25-ந் தேதி (நேற்று முன்தினம்) சிறப்பாக நடைபெற்றது. அதில், திரைக்கலைஞர்கள் ஆற்றிய உரை நெஞ்சில் தித்திக்கிறது.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.