தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் தலைவர் பதவி மற்றும் மு.க. ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவி ஆகியவற்றுக்கு வருகிற 28-ந் தேதி (நாளை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர், பொருளாளர் தேர்ந்தெடுக் கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் 26-ந் தேதி (நேற்று) அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு பெற்று தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் வந்தனர். மு.க.ஸ்டாலினை பார்த்ததும் அண்ணா அறிவாலய வளாகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, இந்திர குமாரி, தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள- தாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அண்ணா அறிவாலயத்தின் உள்ளே சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன்பிறகு காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார். வேட்புமனு கட்டணம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தி அதற் கான ரசீதையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மு.க.ஸ்டாலினின் வேட்பு மனுவை தி.மு.க.வின் 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்தனர். பொதுக்குழு, செயற்குழு, மாவட்ட, நகர, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வேட்புமனுவை வழிமொழிந்தனர்.
இதேபோல் பொருளாளர் பதவிக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தனது சகோதரர் மு.க.ஸ்டாலினை, கனிமொழி எம்.பி. கன்னத்தில் முத்தமிட்டு, கைகுலுக்கி வாழ்த்தினார். தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்து விட்டு 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது தொண்டர்கள், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று வாழ்த்தி கோஷமிட்டனர். அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலினையும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனையும் தவிர வேறு யாரும் நேற்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இன்று (திங்கட்கிழமை) பகல் 1.30 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம், மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட இருக்கிறது.
வேட்புமனு தாக்கல் தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நிருபர்களிடம் கூறும்போது, “மு.க. ஸ்டாலின் தலைவராக வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருமனதாக முன்மொழிந்து, வழிமொழிந்து உள்ளனர். இதேபோல் துரைமுருகன் பொருளாளராக வரவேண்டும் என்று அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இருக்கிறோம்” என்றார்.
மாலை 4 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி நிருபர்களிடம் கூறும்போது, “வேட்புமனு தாக்கல் மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அவர்களை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பாளர் இறுதிப்பட்டியல் பொதுச் செயலாளர் க.அன்பழகனிடம் ஒப்படைக்கப்படும். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பொதுக்குழுவில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்றார்.
அதன்படி, நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு, தன்னுடைய தாயார் தயாளு அம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதேபோல், அண்ணாநகர் சென்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் வேட்புமனுவை காட்டி, வாழ்த்து பெற்றார்.
தி.மு.க. உருவான நேரத்தில் கட்சியில் தலைவர் பதவி இல்லை. தி.மு.க.வின் முதல் பொதுச்செயலாளராக அறிஞர் அண்ணா இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு முதல் முறையாக கட்சியில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய மறைவு வரை தி.மு.க. தலைவர் பதவியில் 50 ஆண்டு காலம் கருணாநிதி இருந்தார். தற்போது, தி.மு.க. வின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
கருணாநிதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 4-ந் தேதி கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க. தலைவருக்கு உண்டான அனைத்து அதிகாரங்களையும் பொதுக் குழு அவருக்கு வழங்கி இருந்தது. கடந்த 1½ ஆண்டுகள் தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார். தற்போது தி.மு.க. தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளதை தொடர்ந்து, தி.மு.க.வில் செயல் தலைவர் பதவி நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.