அமெரிக்காவில் பயங்கரம்: வீடியோ விளையாட்டு விடுதிக்குள் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் பாதுகாப்பிற்காக தனி நபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் திடீரென உணர்ச்சி வசப்படுவோரும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டோரும் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி மனித உயிரை காவு கொள்வது அங்கு வாடிக்கையாக உள்ளது.
கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், பூங்காக்கள் என எங்காவது ஓரிடத்தில் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடந்த வண்ணம்தான் உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காத அமெரிக்க நகரங் களே கிடையாது என்று கூறும் அளவிற்கு அங்கு துப்பாக்கி கலாசாரம் பரவி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லி என்ற சிறு நகரத்தில் ‘ஜி.எல்.எச்.எப் கேம் பார்’ என்னும் வீடியோ விளையாட்டு விடுதியில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
இந்த விடுதியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வீடியோ கால்பந்து தொடர் போட்டி இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் பிராந்திய அளவில் வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதனால் இந்த விளையாட்டை இளம் பெண்கள், வாலிபர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.
அதிக பரிசுத்தொகை கொண்ட போட்டி என்பதாலும் விடுமுறை நாளில் போட்டி நடந்ததாலும் அமெரிக்கா முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணையதளம் வழியாக விளையாடினர்.
அப்போது விடுதிக்குள் இருந்த ஒரு இளைஞர் எழுந்து தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வீடியோ விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த ஜாக்சன்வில்லி நகர போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விடுதிக்குள் துப்பாக்கியால் சுட்டவர் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீடியோ கால்பந்து விளையாட்டு போட்டியில் தோற்ற காரணத்தால் அந்த இளைஞர் இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் அவருடைய பெயர் டேவிட் கேத்ஸ் (வயது 24) என்பதையும், மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரைச் சேர்ந்தவர் என்பதையும் போலீசார் அடையாளம் கண்டனர். டேவிட் கேத்ஸ் சுட்டதில் பலியான இருவர் யார் என்ற விவரத்தை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.