Breaking News
ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5½ கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று கிழிந்து போன பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டது. ரெயில் பெட்டியின் கூரையில் துளைபோட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரெயிலில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.500, ரூ.1,000 கிழிந்த நோட்டுகள் ரூ.325 கோடியளவில் அந்த ரெயிலில் கொண்டுவரப்பட்டது. தனி ரெயில் பெட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அந்த பணம் கொண்டுவரப்பட்டது.

பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொள்ளையர்கள் பணத்தை அள்ளி சென்றுவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக இந்த கொள்ளை வழக்கை சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினார்கள். 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரையில் டீசல் என்ஜின் மூலமாகவும், விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு மின்சார என்ஜின் மூலமாகவும் இயக்கப்பட்டது. விருத்தாசலத்தில் இருந்து சென்னை வரை ரெயில் பெட்டி மேலே மின்கம்பிகள் செல்வதால், நிச்சயமாக ரெயில் பெட்டியின் கூரையில் துளைபோட்டு கொள்ளையடிப்பது முடியாத காரியம்.

எனவே சேலம்-விருத்தாசலம் இடையே தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். சேலம்-விருத்தாசலம் இடையே உள்ள 138 கி.மீ. தூர ரெயில்வே தண்டவாள பகுதிகளையும், ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. ரெயில்வே போலீசாரால் துப்புதுலக்க முடியாத நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக மிக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மும்பையை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் ஏற்பட்டது. தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். அதிலும் கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைக்கவில்லை. தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய உளவுப்பிரிவு துணையோடு நடத்திய விசாரணை மூலம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

சேலத்தில் இருந்து சென்னை வரை ரெயில் தண்டவாள பகுதியில் அமைந்துள்ள செல்போன் டவர்கள் கண்காணிக்கப்பட்டது. அந்த செல்போன் டவர்கள் மூலம் பேசப்பட்ட பல்லாயிரக்கணக்கான செல்போன் எண்களை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். அதில் குறிப்பிட்ட 10 செல்போன் எண்களை மட்டும் தங்களது சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து ஆய்வு செய்தனர்.

அந்த செல்போன் எண்களை பயன்படுத்தியவர்கள் தான் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர். அந்த செல்போன் எண்களை பயன்படுத்தியது மத்திய பிரதேச கொள்ளை கும்பல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்கும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ அளித்த தகவலின் அடிப்படையில், இந்த ரெயில் கொள்ளை வழக்கில் துப்பு துலங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை மறுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வழங்கிய படங்கள் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு, சென்னையில் மின்சார ரெயில் கடத்தி செல்லப்பட்டு விபத்துக்குள்ளான வழக்கு போன்ற பெரிய சம்பவங்களில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது இந்த ரெயில் கொள்ளை வழக்கிலாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துவிட வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இந்த வழக்காவது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.