செல்லாத ரூபாய் நோட்டு: அரசு புதிய உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அமைப்புகள் தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க வசதியாக, சட்டத்தில் சிறு திருத்தம் செய்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவம்பரில் அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பான சட்டத்தில், தனி நபர்கள், 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடைய செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கக் கூடாது.
இந்நிலையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி நாளான, 2016, டிச., 31க்கு முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட, 500 மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் மற்றும் அந்த மதிப்புள்ள கள்ள நோட்டுகள், பல்வேறு அமைப்புகளிடம் உள்ளன. இவற்றை ஒப்படைக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்த நோட்டுக்களை ஒப்படைக்க, கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, மத்திய நேரடி வரி வாரியம், மத்திய மறைமுக வரி வாரியம் மற்றும் அமலாக்கத் துறை மற்றும் அவற்றின் அமைப்புகள், செல்லாத ரூபாய் நோட்டுகளை இருப்பு வைக்க அனுமதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.