கேரளா: தூய்மை பணியில் ஈடுபட்ட 70,000 தன்னார்வலர்கள்
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில், ஒரே நேரத்தில், 70 ஆயிரம் தன்னார்வலர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
கேரளாவில், சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், கடும் வெள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியும், நிலச் சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பை, பல பகுதிகளில் தேங்கிக் கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து, தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலத்தின் பல இடங்களில், மக்கள் ஒன்று கூடி, துாய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில், நேற்று ஒரே நாளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 70 ஆயிரம் பேர் ஒன்று கூடி, துாய்மை பணியில் ஈடுபட்டனர். சாலைகள், நீர் போக்கு கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த பணியால், 16 கிராம பஞ்சாயத்துகள் சுத்தமாயின. இந்த பணியில் பங்கேற்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பஸ், படகு, தனியார் வாகனங்களில், ஆயிரக்கணக்கானோர், குட்டநாடு வந்தடைந்தனர்.