மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரத்து 901 கனஅடியாக குறைந்தது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்தது. சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், கர்நாடகாவிலும் மழைப்பொழிவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரத்து 712 கனஅடியிலிருந்து 13 ஆயிரத்து 901 கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 119.82 அடியாகவும், நீர் இருப்பு 93.18 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 17 ஆயிரத்து 825 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.