Breaking News
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். வில்வித்தையில் இந்தியா 2 வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

பேட்மிண்டன் போட்டி
18–வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் 10–வது நாளான நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை எதிர்கொண்டார்.

வெள்ளிப்பதக்கம் வென்று சிந்து சாதனை
34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தாய் ஜூயிங் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். அவருக்கு ஈடுகொடுக்க சிந்து எல்லா வகையிலும் போராடினார். இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் தாய் ஜூயிங் 21–13, 21–16 என்ற நேர்செட்டில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தோல்வி கண்ட பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றார். ஒட்டுமொத்தத்தில் தாய் ஜூயிங்கிடம் 13–வது முறையாக மோதிய சிந்து 10–வது தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக அவரை ரியோ ஒலிம்பிக் போட்டியில் கால்இறுதியில் சிந்து வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவரிடம் 6 முறை சிந்து சரண் அடைந்துள்ளார்.

கணிக்க முடியவில்லை
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த உயர்வான பதக்கம் இது தான். இதற்கு முன்பு இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் வெண்கலப்பதக்கத்தை தாண்டவில்லை. ஐதராபாத்தை சேர்ந்த 23 வயதான சிந்து இந்த ஆண்டில் நடப்பு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட 5 போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், அதில் அவர் ஒன்றில் கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு சிந்து கருத்து தெரிவிக்கையில், ‘தாய் ஜூயிங் மிகவும் வலுவான வீராங்கனை. அவரது ஆட்டம் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவரது ஆட்டத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் வீழ்த்த முடியாத வீராங்கனை கிடையாது’ என்றார்.

வெற்றிக்கு பிறகு தாய் ஜூயிங் அளித்த பேட்டியில், ‘சிந்துவை நான் பலமுறை வீழ்த்தி இருக்கிறேன். ஆனாலும் அவரை தான் எனது பலமான எதிராளியாக கருதுகிறேன். எங்கள் நாட்டு வீரர் டியான் சென் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் நாட்டுக்காக தங்கம் வென்றாக வேண்டும் என்ற அதிக மனஉறுதியுடன் விளையாடினேன்’ என்று தெரிவித்தார்.

வில்வித்தையில் விறுவிறுப்பு
வில்வித்தையில் ‘காம்பவுண்ட்’ ஆண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி (அபிஷேக் வர்மா, ரஜத் சவுஹான், அமன் சைனி), தென்கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. வழக்கமான 4 செட்கள் முடிவில் இந்திய அணி, தென்கொரியாவை விட ஒரு புள்ளி அதிகம் பெற்று இருந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றதாக நினைத்து நமது வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆனால் கடைசி செட்டில் தென்கொரியா வீரர் எய்த ஒரு அம்பு 9 புள்ளியாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்கொரியா அணி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மறுபரிசீலனை செய்த போட்டி நடுவர்கள் அதனை 10 புள்ளிகள் என்று மாற்றி அறிவித்தனர். இதனால் இரு அணிகளும் 229–229 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன.

இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்
இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘ஷூட்–ஆப்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென்கொரியா, இந்தியா அணிகள் தலா 29 புள்ளிகள் குவித்தன. இதில் தென்கொரியா பெற்ற ஒரு 10 புள்ளியில் அம்பு இலக்கின் மைய பகுதியில் மிகவும் நெருக்கமாக குத்தி இருந்தது. இதனால் நூலிழையில் தென்கொரியா அணி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி பட வேண்டியதானது.

வில்வித்தையில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில் முஸ்கன் கிரார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 228–231 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. உலக சாம்பியனான தென்கொரியா அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.