Breaking News
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வங்கிகளுக்கு திரும்பவில்லை

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வங்கிகளுக்கு திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவு பிரதமர் மோடி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

ஒன்றரை ஆண்டு பணி
செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டபோது ரூ.15.41 லட்சம் கோடி ரூபாய் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. இந்த நிலையில் வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த செல்லாத நோட்டுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணத்தை எண்ணும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரிசர்வ் வங்கி பணத்தை எண்ணுவதில் மிகவும் மந்தமாக செயல்படுவதாக கேலி செய்தன.

இந்த நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு வங்கிகளுக்கு திரும்பிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி எண்ணி முடிக்கும்படி அண்மையில் முடிந்தது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2017–18–ம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ரூ.10,720 கோடி வரவில்லை
கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி நாட்டில் ரூ.15.41 லட்சம் கோடி அளவிற்கு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இவற்றில் ரூ.15.31 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்தன. ரூ.10 ஆயிரத்து 720 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை.

மிகப்பெரிய நடவடிக்கை
குறிப்பிட்ட மதிப்பிலான பணத்தை எண்ணும் பணி ரிசர்வ் வங்கிக்கு ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகவே அமைந்தது. என்றபோதிலும் அந்தப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

வங்கிகளுக்கு வந்த அத்தனை செல்லாத நோட்டுகளும் முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சரி பார்க்கப்பட்டன. அதன்பிறகு கணக்கிடும் எந்திரங்கள் மூலம் துல்லியமாகவும், அதிவேகமாகவும் எண்ணப்பட்டது. அத்துடன் ரூபாய் நோட்டுகளின் உண்மைத் தன்மையும் சரிபார்க்கப்பட்டது.

பழைய ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக எண்ணி முடிக்கப்பட்டபோது, வங்கிகளுக்கு திரும்பி வந்த மொத்த பணம் ரூ.15.31 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் 99.3 சதவீத அளவிற்கு வங்கிகளுக்கு திரும்பியது.

நோட்டுகள் எண்ணப்பட்டபோது போலி ரூ.500 நோட்டுகள் 59.7 சதவீதமும், ரூ.1,000 நோட்டுகள் 59.6 சதவீதமும் கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சிடும் செலவு
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி 2016–17–ம் ஆண்டில் ரூ.7,965 கோடி செலவிட்டது. அதற்கு முந்தைய ஆண்டு ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு செலவிட்ட தொகையைப் போல் இது இன்னொரு மடங்கு ஆகும். 2015–16–ல் ரூ.3,421 கோடிக்கு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு இருந்தது.

2017–18–ல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ரூ.4,912 கோடி செலவிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.