மோடியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ராகுல் காந்தி பாதுகாக்கிறார் : பாரதீய ஜனதா கடும் விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்போரில், 2 பேர், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில், இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்தான். அப்போது நீதிமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 2 பேரையும் நக்ஸலைட் ஆதரவாளர்கள் என்றும், தன்னார்வ தொண்டு அமைப்பு என்ற போர்வையின்கீழ் அவர்கள் 2 பேரும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இவர்கள் 2 பேரும், ஆயுதங்கள் தாங்கிய கொரில்லா பயங்கரவாதிகளை விட அபாயமானவர்கள் என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே அவர் ஏற்க மறுக்கிறார். கைது செய்யப்பட்டவர்களை மனித உரிமைகளுக்கான சாம்பியன்கள் என்று ராகுல் புகழ்கிறார்.
காங்கிரஸ் மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது. தன்னைத் தானே அழிக்கும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசால் கைது செய்யப்படும்போது, அவர்களை நக்ஸலைட் தீவிரவாதிகள் என்று காங்கிரஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் பாஜக அரசால் கைது செய்யப்படும்போது, அவர்களை மனித உரிமை ஆர்வலர்கள் என்கின்றனர். மக்களுக்கு உரிமைகள் அளிக்கப்படுவதை பாஜக ஆதரிக்கிறது. அதேநேரத்தில், தாய்நாட்டை பிளவுப்படுத்துவதை பாஜக ஆதரிக்காது” என்றார்.