300 பவுன் நகையை மோசடி செய்ய நடிகர் செந்திலின் உறவினர் நடத்திய ‘வழிப்பறி நாடகம்’ விசாரணையில் திடீர் திருப்பம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குருவலிங்கம். அவருடைய மனைவி உமா(வயது 42). இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் உறவினர்கள். மத்திய கூட்டுறவு வங்கியின் கமுதி கிளையில் லாக்கரில் இருந்து 300 பவுன் நகையை உமா எடுத்து வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, வழிப்பறி நடந்ததாக உமா கூறிய நேரத்தில் மோட்டார் சைக்கிள் எதுவும் சென்றதாக தெரியவில்லை. இதனால் போலீசார் உமா மீது சந்தேகப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் 300 பவுன் நகையை மோசடி செய்வதற்காக அந்த நகைகள் கொள்ளையர்களால் வழிப்பறி செய்யப்பட்டது எனக்கூறி உமா நாடகமாடியது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-
உமாவின் சகோதரி சண்முகவடிவு. இவர் 300 பவுன் நகைகளை கடந்த 2014-ம் ஆண்டு உமாவிடம் கொடுத்து அவரின் வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். சண்முகவடிவின் கணவர் பூபதிராஜா சென்னையில் படஅதிபராக உள்ளார். இந்த நகைகளை கமுதி மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருப்பதாக உமா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சண்முகவடிவின் மகன் திருமணம் நடைபெற இருந்ததால் நகைகளை எடுத்துதரும்படி சண்முகவடிவு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நகைகளை எடுத்துவரும்போது தான் மர்மநபர்கள் பறித்து சென்றதாக உமா கூறினார். வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து பார்த்தபோது உமாவின் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது. வங்கிக்கு சென்ற சில நிமிடங்களில் அவர் திரும்பி வந்ததும், அவரிடம் நகை பறித்து சென்றதை அந்த பகுதியில் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்ததும் உமா மீது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அக்காள் சண்முகவடிவு கொடுத்த நகையை உமா அடகு வைத்து வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்காக வாங்கிய கடன்களை அடைப்பதற்காக பல்வேறு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளதோடு, சில நகைகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மகனின் திருமணத்திற்காக அக்காள் நகைகளை திரும்ப கேட்டபோது செய்வதறியாது திகைத்த உமா, முதலில் வங்கி லாக்கர் சாவி தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். புதிய சாவி தயார் செய்து பெறப்பட்டதும், வங்கி மேலாளர் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று கூறி சமாளித்து உள்ளார்.
வங்கிகளில் உமா அடகு வைத்துள்ள நகைகள் குறித்த தகவல்களை சேகரித்தால் தான் அவை சண்முகவடிவின் நகைகள் தானா? என்பதை உறுதி செய்ய முடியும். இதுகுறித்த தகவல்களை சேகரிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டும்போது அதற்கான பணத்தை ஏற்பாடு செய்தது உமாவின் கணவரான குருவலிங்கத்திற்கும் தெரிந்திருக்கும் என்பதால், அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.