ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது டி.ராஜா எம்.பி. பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபு சார்ந்த ஒன்றாகும். மனிதர்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை வெளிப்படுத்துகிற ஒரு விழாவே ஜல்லிக்கட்டு. அதன் மீதான தடையை கலாசாரம் மீதான தாக்குதலாக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் களத்தில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, இதை மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதித்துறை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களும், இளைஞர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது.
விலங்குகள் நலவாரியம் போன்ற அமைப்புகளை தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைப்பதில் தவறில்லை. காளைகளை வனவிலங்கு என்று சொல்லிவிட முடியாது. அவை வீட்டு விலங்குகளாக, குடும்ப உறுப்பினர்களாக மாறிவிட்டன. தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் அரசு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக காவல்துறை ஏன் அப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை. அதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி