நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 3 மனிதர்கள் அளவுள்ள பெரிய கணவாய் மீன்
நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் நகரின் தெற்கு கடலோர பகுதியில் நீச்சல் அடிப்பதற்காக சகோதரர்கள் 3 பேர் காலையில் சென்றுள்ளனர்.
அங்கு 4.2 மீட்டர் நீளமுள்ள கணவாய் மீன் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. இது உலகின் மிக பெரிய கணவாய் மீன் என்று நியூசிலாந்து நாட்டின் உயிரி பாதுகாப்பு துறை உறுதி செய்துள்ளது. இந்த பெரிய அளவிலான கணவாய் மீன்கள் 3 மீட்டர் முதல் 9 மீட்டர் நீளம் வரை வளர கூடியது. மிக அரிய வகையை சேர்ந்த இந்த பெரிய கணவாய் மீன் ஆழ்கடலில் வசிக்க கூடியது.
கடந்த 2004ம் ஆண்டு வரை உயிருடன் கூடிய பெரிய கணவாய் மீன் பற்றிய வீடியோ எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உயிருடன் கூடிய மிக பெரிய கணவாய் மீன் ஒன்றை 2004ம் ஆண்டு புகைப்படங்களாக பதிவு செய்தனர்.
இந்த கணவாய் மீன்களில் ஒரு வகையான கொலாசல் வகை கணவாய் மீன் 14 மீட்டர் நீளம் வரை வளர கூடும் என்றும் அன்டார்டிகாவை சுற்றிய உறைந்த நீர் பகுதிகளில் வசிக்க கூடும் என்றும் கடல்சார் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் சகோதரர்களால் கண்டறியப்பட்ட பெரிய கணவாய் மீன், நியூசிலாந்து நாட்டில் உள்ள தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.