நேபாள அதிபருடன் மோடி உள்ளிட்ட பிம்ஸ்டெக் தலைவர்கள் சந்திப்பு
வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நேபாள அதிபர் பித்யதேவி பண்டாரியை, மோடி உள்பட பிம்ஸ்டெக் தலைவர்கள் சந்தித்தனர். மதிய உணவு விருந்தையும் பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு நேபாள அதிபர் வைத்து உபசரித்தார். இன்று மாலை, இலங்கை அதிபர் சிறிசேனா, வங்காளதேச அதிபர் ஷேக் ஹசீனா ஆகியோரை தனித்தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி இரு தரப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.