ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அனுமதி தர மறுப்பு : வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28ந்-தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள், முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் மத்திய பசுமை தீர்ப்பாயம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பாக தலா ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த குழு இரு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் இந்த குழு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி எஸ்.ஜே. வசீப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 6 வாரத்திற்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி வசிப்ஃதர், குழுவில் இருந்து விலகுவதாக கடிதம். விசாரணையின் போது தேசிய பசுமை தீர்ப்பாயம் தகவல் கூறி உள்ளது
நிர்வாக பணிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அனுமதி தர மறுப்பதாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி மோஹித்ஷாவை நியமிக்கலாம் என வேதாந்தா நிறுவனம் கூறியது.
ஆய்வு குழுத்தலைவர் நியமனம் குறித்து இன்றே முடிவு செய்யப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டபோதும் 2600 பேரை வேலையை விட்டு நீக்காததால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம் செய்தது.