Breaking News
நடிகை ஸ்ரேயா அரசியலில் ஈடுபட முடிவு?

நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நரகாசுரன்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அரவிந்தசாமி நடித்துள்ளார். கார்த்திக் நரேன் டைரக்டு செய்துள்ளார். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார். மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரேயா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘‘ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தது பெருமை. அவர் எளிமையானவர். மனிதநேயம் உள்ளவர். லைட்மேன் முதல் பெரிய நடிகர்–நடிகைகள் உள்பட எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பார். பணம், புகழ், சேர்ந்தும் எளிமையாக பழகினார். இதுமாதிரி ஒருவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. அவரிடம் நிறைய வி‌ஷயங்கள் கற்றேன். ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. யோகா, தியானம் செய்கிறேன். எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன். விஜயசாந்தி, ஜெயப்பிரதா போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதை போல் நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது.

அரசியலுக்கு வர நெளிவு சுளிவுகளும் சூட்சுமங்களும் வேண்டும். எனக்கு அவை இல்லை. எனவே நான் அரசியலுக்கு பொருத்தம் இல்லை என்று நினைக்கிறேன். நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கிய படம். முதலில் நடிக்க தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் முழு கதையையும் அனுப்பினார். அதை படித்ததும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்பு பயிற்சி எடுத்து இதில் நடித்தேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் கார்த்திக் நரேன் கூறும்போது, ‘‘நரகாசுரன் திகில் படமாக தயாராகி உள்ளது. அரவிந்தசாமி தொழில் அதிபராகவும் ஸ்ரேயா அவரது மனைவியாகவும் வருகிறார்கள். 5, 6 பேர் பயணத்தில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அது சஸ்பென்ஸ், திகிலாக இருக்கும். ஊட்டியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.