கேரள நிவாரண நிதி ரூ.1027 கோடி ஆனது
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரண நிதியும், நிவாரண பொருட்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கேரளா நிவாரண நிதிக்காக மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி வழங்கப்பட்டது. பின்னர் வெள்ள பாதிப்புக்களை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கேரள நிவாரண நிதியாக இதுவரை எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் நிவாரண நிதிக்கு பணமாக மட்டுமின்றி நிலம், காசோலை, நகைகளாகவும் நிதி பெறப்பட்டுள்ளது. ஆக.,29 வரை பணமாக மட்டும் ரூ.730 கோடி பெறப்பட்டுள்ளது. நிலம், நகை, காசோலைகளின் மதிப்பு பின்னர் அறிவிக்கப்படும். சேத விபரங்கள் ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் தற்போது கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்ட நிதித்தொகை ரூ.1027 கோடி ஆக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.